#Onthisday: சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளைக் கடந்த மிதாலி ராஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், ஒருநாள் அணியின் கேப்டனுமானவர் மிதாலி ராஜ். இவர் 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஒரு அஸ்திவாரமாக தனது பணியை திறம்படச் செய்து வருகிறார் மிதாலி ராஜ்.
தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்தவர் மிதாலி ராஜ். ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி, இந்திய அணியில் இடம்பிடித்தார்.
ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் போட்டிகலில் விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார்.
மேலும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒரு நாள் போட்டியின் போது 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் உலக சாதனையையும் அவர் படைத்தார். இதுவரை 11 டெஸ்டுகளிலும் 214 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
முன்னதாக 2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2ஆவது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இந்த நாளில் படைத்தார்.
ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தினார் மிதாலி ராஜ். அவருக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
2006ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர் மிதாலி ராஜ். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இவர் இந்திய மகளிர் அணியை வழிநடத்தியுள்ளார்.
அதன்பின் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாரவதற்காக, 2019ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ரா 2,364 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் கேப்டனாக தற்போது உள்ள மிதாலி ராஜ், நியூசிலாந்தில் அடுத்த வருடம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளார். இதுவே தன்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 22 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் மிதாலி ராஜ், இன்றுடன் தனது 23ஆவாது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்களின் பட்டியல்:
- சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 22 வருடங்கள் 91 நாள்கள்
- மிதாலி ராஜ் - இந்தியா - 22 வருடங்கள்*
- சனத் ஜெயசூர்யா - இலங்கை - 1 வருடம் 184 நாள்கள்
இன்னும் 91 நாள்களில் சச்சின் சாதனையை 38 வயதான மிதாலி ராஜ் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.