வரலாற்றில் இன்று: ரசிகர்கள் வெறுத்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ்!

Updated: Tue, Jun 08 2021 11:00 IST
CRICKETNMORE

கடந்த 1975ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 7) சர்வதேச கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டியில் ஸ்ரீநிவாஸ் வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி, மைக் டென்னஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டென்னிஸ் அமிஸ் அதிரடியாக விளையாடி இந்திய அணி பந்து வீச்சை துவம்சம் செய்தார். இப்போட்டியில் அவர் 18 பவுண்டரிகளை விளாசி 137 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய கெய்த் ஃபிள்ட்சர் 68 ரன்களை எடுத்தார். 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 60 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சயீத் அபித் அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது. 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் - எக்நாத் சொல்கர் இணை துவக்கம் தந்தது. அதுநாள் வரை அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன சுனில் கவாஸ்கர், அந்த இன்னிங்ஸில் விளையாடியது ரசிகர்களுக்கு ஒரு கெட்ட கனவு போல் அமைந்தது. மேலும் அப்போதைய இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையாகவும் அமைந்தது.

ஏனெனில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுனில் கவாஸ்கர் 174 பந்துகளில் வெறும் 34 ரன்களை மட்டுமே சேர்த்து சுயநலமான இன்னிங்ஸை விளையாடி இருந்தார். அவரது கிரிக்கெட் கேரியரில் செய்த மிகப்பெரும் தவறாகவும் இது அமைந்து இன்று வரை பேசப்படுகிறது. 

மேலும் இவரது பொருமையான ஆட்டத்தை மைதானத்தில் இருந்த பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் சில, மைதானத்திற்குள் நுழைந்து தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

இப்போட்டியில் 60 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 202 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்திருந்தது. இத்தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது.

இந்த தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் மேலாளராக இருந்த ஜி.எஸ்.ராமச்சந்திரன் தனது அறிக்கையில்,“இது ஒரு வீரரின் மிகவும் சுயநலமான மற்றும் அவமானகரமான செயல்திறன். ஆனால் சுனில் கவாஸ்கர் விக்கெட் மிகவும் மெதுவாக இருந்ததே தனது இன்னிங்ஸிற்கு காரணம் என்று கூறினார். அதே ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி 334 ரன்களை எப்படி எடுத்தனர்? என்பது தான் எனக்கு அவரிடமிருந்த ஒரே கேள்வி” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். 

இப்போட்டி குறித்து சுனில் கவாஸ்கர் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஒரு அறிக்கையில் கூறுகையில், “அந்த இன்னிங்ஸ் என்னால் கூட விவரிக்க முடியாத ஒன்று. அந்த போட்டியின் முதல் சில ஓவர்களைப் பார்த்து தான் நான் பொருமையாக விளையாடினேன். அதுவும் அப்போட்டியில் நான் விளையாட விரும்பாத ஷாட்களை விளையாடினேன்.  அப்படி விளையாடியதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று சாதாரணமாக கூறியிருந்தார். 

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை நாயகனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கரின் இந்த ஒரு இன்னிங்ஸ், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மறையா வடுவாக இன்றளவும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. 

TAGS