WTC Final: டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியன் யார்? இந்தியா vs நியூசிலாந்து ஓர் அலசல்!

Updated: Fri, Jun 18 2021 11:08 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடின. கரோனா அச்சத்தால் சில தொடர்கள் ரத்தாகின. இதனால் புள்ளிகளின் விழுக்காடு அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 

இந்த நிலையில் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று (ஜூன் 18) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்திய அணி ஓர் அலசல்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் கரோனா அச்சுறுத்தல் மற்றும் பயோ பபுள் காரணமாக 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டனர்.  பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். 

இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் அதிகமாக இருக்கும். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை வந்து விட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகத் தொடங்கி விடும். அதனால் வேகப்பந்து வீச்சை மிகவும் துல்லியமாக கணித்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். 

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் ஆர்டரில் கேப்டன் விராட்கோலி, புஜாரா ஆகியோரைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடியில் மிரட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் இப்போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டது. ஆடுகளம் வறண்டு காணப்பட்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி 1983ஆம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2007ஆம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை, 2011ஆம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2002ஆம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இலங்கையுடன் பகிர்வு, 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இப்படி 5 கோப்பைகளை வென்று இருக்கிறது.

ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வெற்றிபெற்றதில்லை. அவரது தலைமையில் இந்தியஅணி 2017ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரைஇறுதியிலும் தோல்வியை கண்டது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். அது மட்டுமின்றி ஐசிசி போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை புரட்டியெடுத்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டவும் இப்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

நியூசிலாந்து அணி ஓர் பார்வை

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் மனரீதியாக அவர்களின் நம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துள்ளது. மேலும் காயத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே, கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோர் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்தின் பந்து வீச்சு அசுர பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சௌதி, நெய்ல் வாக்னர் ஆகியோர் நீண்ட காலமாக அபாயகரமான கூட்டணியாக இருக்கிறார்கள். ‘ஸ்விங்’ மற்றும் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் நடத்துவதிலும் இவர்கள் கில்லாடிகள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் உருவாகி விட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியாக இவர்கள் இருப்பார்கள்.

நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000ஆம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது. 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு என இருமுறை 50 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவியது. கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கோப்பை ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. 

நியூசிலாந்து வீரர்களும் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள். இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

போட்டியின் சிக்கல்

நேரம் இழப்பீடு இன்றி 5 நாட்களும் போட்டி முழுமையாக நடந்து டிராவில் முடிந்தால் கோப்பை இரு அணிகளுக்கும் கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் சவுத்தம்ப்டனில் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு, மாற்று நாளான (ரிசர்வ் டே) 6ஆவது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். அதே சமயம் 5ஆவது நாளுக்குள் முடிவு கிடைத்து விட்டால், நேரம் கணக்கீடு மற்றும் கூடுதல் நாள் தேவை இருக்காது.

பரிசுத்தொகை

இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு தண்டாயுதத்துடன் ரூ.11 கோடியும், 2ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் தண்டாயுதம் மற்றும் பரிசுத்தொகை ஆகியவை பகிர்ந்தளிக்கப்படும். 

சவுத்தாம்ப்டன்

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து அணி இந்த மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். கரோனா கட்டுப்பாடு காரணமாக இப்போட்டிக்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.

நியூசிலாந்து: டேவன்கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ்/ வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன்/மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், ட்ரெண்ட் பவுல்ட், டிம் சௌதி, நெய்ல் வாக்னர்.

TAGS