இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியானது கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து சென்றடைந்தது.
இதில் ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து, கோப்பையைக் கோட்டைவிட்டது.
Trending
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னனி வீரர்கள் உள்டக்கிய 20 பேர் கொண்ட அணி இங்கிலாந்தில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
மேலும் இந்த அணியுடன் மேலும் நான்கு கூடுதல் வீரர்களான, பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகுவார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
ஒருவேளை சுப்மன் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் முதல் தேர்வாக இருப்பார் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலு குறிப்பிட்டுள்ள கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகியோர் ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற்றதால் அவர்களைப் பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
ஆனால் மற்ற இரண்டு வீரர்களான அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரனைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாததால், அவர்கள் எப்படி மாற்று வீரர்களாகத் தேர்வு செய்யப்படுவர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிலும் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு தான் கூடுதல் வீரராக தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வாகும் அளவிற்கு அவர் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்..!
தற்போது 25 வயதாகும் வலது கை துவக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன், டேராடூனில் பிறந்து மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி கோப்பை முதலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறார். கடந்த 2018-2019ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் அனைவரும் வியக்கும் வண்ணம் விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், அத்தொடரில் 6 போட்டிகளில் மட்டும் விளையாடி 861 ரன்கள் அடித்து அசத்தினார். அத்தொடரில் அவருடைய சராசரி 95.66 ஆகும். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
பின் 2019-2020ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடதபோதும், பெங்கால் அணியை தனது அற்புதமான கேப்டன்சியின் மூலம் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார் அபிமன்யு ஈஸ்வரன். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டே நடைபெற்ற துலீப் கோப்பையில் இந்தியா ரெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
அத்தொடரின் இறுதியாட்டத்தில், இந்தியா கிரீன் அணிக்கு எதிராக 153 ரன்கள் அடித்து அசத்திய ஈஸ்வரினின் மீது இந்திய தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியதால், அவரை இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் கூடுதல் வீரராக தேர்வு செய்திருந்தனர்.
இதுவரை 64 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் 43.57 என்ற சராசரியில், மொத்தம் 4,401 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 233 ஆகும்.
இதனால் தற்போது சுப்மன் கில் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அவரது இடம் நிச்சயம் அபிமன்யு ஈஸ்வரனுக்கு செல்லும் என்பதை இந்த புள்ளி விவரங்களே காட்டுகிறது. மேலும் இந்திய அணியில் சில காலமாகவே ஓப்பனிங்கில் சொதப்பி வந்த ஷிகர் தவான், ப்ரித்வி ஷா ஆகியோரின் இடத்தை நிரப்புவதற்குதான் அபிமன்யு ஈஸ்வரனை அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற கருத்து நிலவும் நிலையில், தற்போது அது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.