ஐசிசி தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரும் இந்திய அணியின் தோல்வி பயணம்!
ஐசிசி தொடர்களில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்..!

கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு 18 வருடங்களாக ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியைத் தோற்கடிக்க முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது. அதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் அமைந்துள்ளது.
ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணி எப்போது இந்தியாவுக்கு சவாலான அணியாக இருந்து வருகிறது. கடைசியாக 2003 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. அதன்பிறகு எந்தவொரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி, நியூசிலாந்தை வென்றதில்லை.
Trending
அப்படி ஐசிசி தொடர்களில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்த போட்டிகள் குறித்த சில தகவல்கள் இதோ..!
2007 டி20 உலகக்கோப்பை
கடந்த 2007ஆம் ஆண்டுதென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தது.
ஆனால் அத்தொடரின் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையே தழுவியது.
2016 டி20 உலகக்கோப்பை
2016ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இதில் நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில்126/7 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது இந்திய அணி. ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியை 79 ரன்களுக்குள் சுருட்டி அபாரமான வெற்றியைப் பெற்றனர்.
2019 ஒருநாள் உலகக்கோப்பை
கடந்த 2019ஆம் அண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக இரு நாள்கள் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 221 ரன்கள் மட்டும் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு முன்பு லீக் சுற்றில் இரு அணிகளும் விளையாட இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
2021- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இப்பட்டியளில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் இடம்பெற்றுள்ளது. இதில் கடந்தாண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகள்ளிலும் மோசமாகத் தோற்றது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாதனைப் படைத்தது. இதனால் ஐசிசி போட்டி என்றாலே நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்த தயாராக இருக்கும் என்கிற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக இந்த வருடமும் அடுத்த வருடமும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்து நடைபெறவுள்ள மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளிலும் நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளும்போது புதிய முடிவுகள் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துள்ளனர்.