#Onthisday: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனை!
கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 29) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்தார்.
‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்ற புனைப்பெயருக்கு சொந்தக்காரார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு உலகெங்கிலும் மற்ற கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான்.
ஏனெனில் உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவிலான போட்டிக்களிலும் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், அதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இதுநாள் வரை தன்வசம் வைத்துள்ளார்.
Trending
கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களை விளாசி 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களையும் குவித்துள்ளார்.
மேலும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிவர் என்ற மற்றொரு சாதனையும் சச்சின் தன்வசம் வைத்துள்ளார். அதில் முகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை விளாசிய ஒரே வீரர் என்பது தான்.
கடந்த 2017ஆம் ஆண்டு இதேநாளில் (ஜூன் 29) அயர்லாந்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 226 ரன்களைச் சேர்த்திருந்தது. அதில் அதிகபட்சமாக மோர் வேன் வைக் 82 ரன்களையும், மார்க் பவுட்சர் 55 ரன்களையும் எடுத்திருந்தனர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சச்சின் - கங்குலி இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இதில் சச்சின் அரைசதம் கடந்தார். அதன்பின் சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 93 ரன்களை எடுத்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை நிகழ்த்தினார். மேலும் அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டில் நீடித்த சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக 35 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையும் அடங்கும்.