விராட் கோலி : 99 டெஸ்ட் போட்டிகளில்‘கிங்’-ன் பயணம் ஓர் பார்வை!
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சில அபாரமான ஆட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் மொஹலி மைதானத்தில் தொடங்குகிறது.
விராட் கோலி தனது 100ஆவது டெஸ்டை நாளை விளையாடவுள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
Trending
இதற்கிடையில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சில அபாரமான ஆட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒருநாள் ஆட்டத்தையும் 2010ஆம் ஆண்டு முதல் டி20 ஆட்டத்தையும் விளையாடிய விராட் கோலி, 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கிங்ஸ்டனில் தனது முதல் டெஸ்டை விளையாடினார்.
வெஸ்ட் இண்டீஸில் தனது முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடிய கோலி, இந்தியாவில் (2011-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக மும்பையில்) விளையாடிய முதல் டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்தார்.
அதன்பின் 2012ஆம் ஆண்டு தனது 8ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 6ஆவது வீரராக களமிறங்கி விராட் கோலி தனது முதல் சதத்தைப் பதிவுசெய்த்தார்.
அதன்பின் 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். அது இந்தியாவில் அவர் அடித்த முதல் சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
பின்னர் 2013இல் சென்னையில் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலேயே விராட் கோலி சதமடித்தார். மேலும் சென்னையில் இதுவரை 4 டெஸ்டுகளில் விளையாடி 1 சதமும் 2 அரை சதங்களும் விராட் கோலி அடித்துள்ளார்.
தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் 3 டெஸ்டுகளில் விளையாடியுள்ள விராட் கோலி,அங்குக் கடைசியாக விளையாடிய டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். 2017இல் இலங்கைக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அதிகச் சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 சதங்களும் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 5 சதங்களும் அடித்துள்ளார்.
இதுவரை விராட் கோலி இந்தியாவில் 44 டெஸ்டுகளும் இங்கிலாந்தில் 15 டெஸ்டுகளும் ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்டுகளும் விளையாடியுள்ளார். அதில் இந்தியாவில் 13 சதங்களும் 12 அரை சதங்களும் அடித்துள்ளார். வெளிநாடுகளில் 55 டெஸ்டுகளில் விளையாடி 14 சதங்களும் 16 அரை சதங்களும் அடித்துள்ளார்.
அதிலும் வெளிநாடுகளில் அதிக சதங்கள் அடித்தது, ஆஸ்திரேலியாவில் தான். அங்கு இதுவரை13 டெஸ்டுகளில் விளையாடி 6 சதங்களும் 4 அரை சதங்களையும் விராட் கோலி விளாசியுள்ளார்.
கடந்த 2016, 2017, 2018 என மூன்று ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ரன் வேட்டை நிகழ்த்தியுள்ளார். 2016இல் 1,215 ரன்களும், 2017இல் 1,059 ரன்களும், 2018இல் 1,322 ரன்களையும் விராட் கோலி எடுத்துள்ளார்.
மேலும் 68 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து 20 சதங்களுடன் 5,864 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டனாக இல்லாத டெஸ்டுகளில் கோலியின் சராசரி - 41.13, கேப்டனாக விளையாடிய டெஸ்டுகளில் கோலியின் சராசரி - 54.80.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 22 சதங்களும் 2ஆவது இன்னிங்ஸில் 5 சதங்களும் எடுத்துள்ளார். அதேபோல் முதல் இன்னிங்ஸில் 13 அரைசதங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நார்த் சவுண்டில் முதல் இரட்டைச் சதமெடுத்தார். மொத்தமாக 7 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இரட்டைச் சதமெடுத்தார் (254* ரன்கள்).
இதுவரை விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார்.
கடந்த 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70ஆவது சதம். 27ஆவது டெஸ்ட் சதம். அடுத்த இரண்டு வருடங்களில், கடந்த 15 டெஸ்டுகளில் கோலியால் ஒரு சதமும் எடுக்க முடியவில்லை. இதனால் 28ஆவது டெஸ்ட் சதத்தை தனது 100ஆவது டெஸ்டில் கோலி அடிக்கவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
விராட் கோலி இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 7,962 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 27 சதங்கள், 28 அரை சதங்கள். 14 முறை டக் அவுட். 24 சிக்ஸர்கள், 896 பவுண்டரிகள். மேலும் இந்திய அணி தரப்பில் 100ஆவது டெஸ்டை விளையாடும் 12ஆவது வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி நாளை படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.