உலகக்கோப்பை 2023: 6ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா ஆஸ்திரேலியா!

Updated: Mon, Oct 02 2023 14:34 IST
Image Source: Google

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாகவும் கருதப்படும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் முதன்மையான வெளிநாட்டு அணி என்றால் அது ஆஸ்திரேலியாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 1987 உலகக் கோப்பையை முதல் முறையாக ஆலன் பார்டர் தலைமையில் இந்திய மண்ணில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.

அதன் பின் 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோரது தலைமையில் மொத்தம் 5 கோப்பைகளை வென்று உலக கிரிக்கெட்டின் முடிசூடா அரசனாக திகழ்ந்து வருகிறது. மேலும் தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் மனம் தளராமல் போராடி வெற்றி காணும் குணத்தை இயற்கையாகவே கொண்ட ஆஸ்திரேலியர்களுக்கு ஐசிசி தொடர்களில் எப்படி அசத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அந்தவகையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று சாதனைப் படைக்க காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் காண்போம்,

ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனம்

சமீபத்தில் நடந்து முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் கோப்பையை கேப்டனாக வென்ற பட் கமின்ஸ் அணியையும் வேகப்பந்து வீச்சு துறையும் தலைமை தாங்குகிறார். அவருடன் கடந்த 2 ஒருநாள் உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்த மிட்சேல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், நாதன் எலிஸ், சீன் அபோட் ஆகியோரால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு துறை இந்திய மண்ணில் மிரட்டும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

அவர்களை விட மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்சேல் மார்ஷ், கேமரூன் க்ரீன் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் துறையை கவனித்துக் கொள்ளும் திறமைமிக்க ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சொல்லப்போனால் உலகின் எதிரணிகளை காட்டிலும் இப்படி 3 வேகப்பந்து ஆல் ரவுண்டர்கள் இருப்பது ஆஸ்திரேலியாவின் தனித்துவமான பலமாகும்.

இந்த மூவருமே அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்ற நிலைமையில் கிளன் மேக்ஸ்வேல் சரவெடியாக பேட்டிங் செய்யும் திறமையுடன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியை மேலும் வலுப்படுத்துகிறார். அதே போல அனுபவம் மிகுந்த ஆடம் ஸாம்பாவுடன் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுப்பதற்காகவே இளம் வீரர் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார்.

இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி மிடில் ஆர்டரை பார்த்துக் கொள்வதற்காக தயாராக இருக்கிறார்.

இருப்பினும் இந்த அணியில் மேக்ஸ்வேல், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பட் கமின்ஸ் ஆகியோர் காயத்தை சந்தித்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளனர். இதில் கம்மின்ஸ், மேக்ஸ்வெஸ், ஸ்மித் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பினாலும், தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டின் நிலை குறித்து தெரியாதத்தால் அது ஆஸ்திரெலியாவுக்கு பின்னடைவாக இருக்கிறது. இருப்பினும் மற்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்துடன் இருப்பதால் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா தகுதியான அணியாக கருத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பை வரலாறு

  •      1975: இரண்டாம் இடம்
  •      1979: லீக் சுற்று
  •      1983: லீக் சுற்று
  •      1987: சாம்பியன்
  •      1992: ரவுண்ட் ராபின் சுற்று
  •      1996: இரண்டாம் இடம்
  •      1999: சாம்பியன்
  •      2003: சாம்பியன்
  •      2007: சாம்பியன்
  •      2011: காலிறுதி சுற்று
  •      2015: சாம்பியன்
  •      2019: அரையிறுதி சுற்று

உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி

பாட் கமின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

ஆஸ்திரேலிய அணியின் போட்டி அட்டவணை (GMT)

  •      அக்டோபர் 08: இந்தியா, சென்னை (0830)
  •      அக்டோபர் 12: தென் ஆப்பிரிக்கா, லக்னோ (0830)
  •      அக்டோபர் 16: இலங்கை, லக்னோ (0830)
  •      அக்டோபர் 20: பாகிஸ்தான், பெங்களூரு (0830)
  •      அக்டோபர் 25: நெதர்லாந்து, டெல்லி (0830)
  •      அக்டோபர் 28: நியூசிலாந்து, தர்மசாலா(0500)
  •      நவம்பர் 04: இங்கிலாந்து, அஹ்மதாபாத் (0830)
  •      நவம்பர் 07: ஆஃப்கானிஸ்தான், மும்பை (0830)
  •      நவம்பர் 11: வங்கதேசம், புனே (0500)
TAGS