உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!

Updated: Tue, Oct 03 2023 23:14 IST
Image Source: Google

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்திருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் முதல் இந்தியாவில் கோலாகமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் காலம் காலமாக பல ஜாம்பவான் அணிகளை அப்செட் செய்துள்ள வங்கதேச அணி இம்முறை அதனைத்தாண்டி சாதிக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக அனுபவ மற்றும் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம். 

வங்கதேச அணியின் பலம் & பலவீனம்

முதலில் பல சர்ச்சைக்கு மத்தியில் அனுபவ வீரர் தமீம் இக்பால் காயத்தால் விலகியுள்ளது வங்கதேசத்திற்கு நிச்சயமான பின்னடைவாகும். இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷாகிப் அல் ஹசன் உலக அளவில் உலக அளவில் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்ட அவர் வங்கதேசத்தின் ஆணிவேராகவும் பார்க்கப்படுகிறார்.

அதே போல துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ் தொடக்க வீரராக அடித்து நொறுக்கும் திறமையை பெற்றிருக்கும் நிலையில் நஜ்முல் சாண்டோ அவருக்கு ஈடு கொடுக்கக்கூடிய மற்றொரு தொடக்க வீரராக இருக்கிறார். மேலும் மிடில் ஆர்டரில் தன்சித் ஹசன், ஹிரிடோய் ஆகியோர் சமீபத்திய தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கையை கொடுக்கின்றனர்.

அவர்களை விட முஷ்பிக்கூர் ரஹீம் மற்றும் முகமதுல்லா ஆகியோர் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருப்பதால் நிச்சயம் மிடில் ஆர்டரில் பலத்தை சேர்ப்பவர்களாக இருக்கின்றனர். மேலும் கடந்த டிசம்பரில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடிப்பதற்கு ஆல் ரவுண்டராக அசத்திய மெஹதி ஹசன் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக பலம் சேர்க்கிறார்.

அத்துடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத் ஆகியோர் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை திணறுடிக்கும் அளவுக்கு சிறந்த வேக்கப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் மெகிதி ஹசன், சோரிபுல் இஸ்லாம், டன்சின் ஷாகிப், ஹசன் மஹ்மத், நசுன் அஹ்மத் ஆகியோரும் வங்கதேசம் அணியின் பந்து வீச்சு துறையில் போராடுவதற்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் ஓரளவு அசத்தக்கூடிய நல்ல வீரர்கள் வங்கதேச அணியில் நிறைந்து இருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விளையாடியும் இன்னும் முதிர்ச்சி தன்மையை எட்டாமல் இருக்கும் அணியாக கருதப்படும் வங்கதேசம் 2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து வீட்டுக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் தொடர்ந்து அசத்துவதில் காலம் காலமாக தடுமாறி வரும் அந்த அணி இம்முறையும் சில டாப் அணிகளுக்கு ஆச்சரியமான தோல்விகளை பரிசளிக்கக்கூடிய அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணியின் உலகக்கோப்பை பயணம்

  •      1975: பங்கேற்கவில்லை
  •      1979: தகுதி பெறவில்லை
  •      1983: தகுதி பெறவில்லை
  •      1987: தகுதி பெறவில்லை
  •      1992: தகுதி பெறவில்லை
  •      1996: தகுதி பெறவில்லை
  •      1999: லீக் சுற்று
  •      2003: லீக் சுற்று
  •      2007: சூப்பர் எயிட்ஸ்
  •      2011: லீக் சுற்று
  •      2015: காலிறுதி சுற்று
  •      2019: லீக் சுற்று

உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணி

ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, மஹேதி ஹசன், தஸ்கின் அஹ்மது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஷாகிப்.

வங்கதேச அணியின் போட்டி அட்டவணை (GMT)

  •      அக்டோபர் 07: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான், தர்மசால (0500)
  •      அக்டோபர் 10: வங்கதேசம் vs இங்கிலாந்து, தர்மசாலா (0500)
  •      அக்டோபர் 13: வங்கதேசம் vs நியூசிலாந்து, சென்னை (0830)
  •      அக்டோபர் 19: வங்கதேசம் vs இந்தியா, புனே (0830)
  •      அக்டோபர் 24: வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, மும்பை (0830)
  •      அக்டோபர் 28: வங்கதேசம் vs நெதர்லாந்து, கொல்கத்தா (0830)
  •      அக்டோபர் 31: வங்கதேசம் vs பாகிஸ்தான், கொல்கத்தா (0830)
  •      நவம்பர் 06: வங்கதேசம் vs  இலங்கை, டெல்லி (0830)
  •      நவம்பர் 11: வங்கதேசம் vs ஆஸ்திரேலியா, புனே (0500)
TAGS