உலகக்கோப்பை 2023: இந்தியாவில் முன்னணி அணிகளுக்கு சவால் கொடுக்குமா ஆஃப்கானிஸ்தான்?

Updated: Wed, Oct 04 2023 15:10 IST
Image Source: Google

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இருமுறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ், மற்றும் இலங்கை போன்ற ஜாம்பவான் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறமுடியாமல் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடி நிலையில், கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேரடியாக இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா போன்ற வல்லமை வாய்ந்த அணிகளுக்கும் அவ்வபோது அதிர்ச்சியைப் பரிசளிக்கும் ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியிலுள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆஃப்கானிஸ்தான் அணியின் பலம் & பலவீனம்

அந்த அணியை பொறுத்த வரை பேட்டிங் துறையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் அதிரடியான தொடக்க வீரர்களாக அறியப்படுகிறார்கள். மேலும் மிடில் ஆர்டரில் ரியஸ் ஹசன், நஜிபுல்லா ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் நல்ல திறமையுடைய வீரர்களாக திகழ்கின்றனர். லோயர் மிடில் ஆர்டரில் முன்னாள் கேப்டன் முகமது நபி அனுபவம் மிகுந்தவராகவும் ஃபினிஷராகவும் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் தயாராக இருக்கிறார்.

அத்துடன் இக்ரம் அலிகில், ஓமர்சாய் ஆகியோர் ஓரளவு நல்ல ஆல் ரவுண்டர்களாக ஆஃப்கானிஸ்தானின் வெற்றிக்கு போராட காத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் விட ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகிய 3 ஸ்பின்னர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சொல்லப்போனால் அந்த 3 வீரர்களால் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளுக்கு நிகராக ஆஃப்கானிஸ்தானின் சுழல் பந்து வீச்சு துறை மிகவும் வலுவானதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

அதே சமயம் வேகப்பந்து வீச்சு துறையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஆகிய வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்காக போராட தயராக இருக்கின்றனர். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய அந்த அணி டாப் அணிகளுக்கு சவாலை கொடுத்து உலகக் கோப்பையை வெல்லுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அனைத்து துறைகளிலும் ஓரளவுக்கு நல்ல பலத்தை கொண்டுள்ள அந்த அணி நிச்சயமாக இத்தொடரில் ஏதேனும் சில டாப் அணிகளை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். எனவே கோப்பையை வெல்வது கடினம் என்றாலும் வளர்ந்து வரும் அணியாக கருதப்படும் ஆஃப்கானிஸ்தான் இத்தொடரில் கணிசமான வெற்றிகளை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதே பெரிய சாதனையாக இருக்கும்.

ஆஃப்கானிஸ்தான் அணி போட்டி அட்டவணை

  •      அக்டோபர் 7: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான், தர்மசாலா (10:30)
  •      அக்டோபர் 11: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், டெல்லி (2:00)
  •      அக்டோபர் 15: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான், டெல்லி (2:00)
  •      அக்டோபர் 18: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான், சென்னை (2:00)
  •      அக்டோபர் 23: பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான், சென்னை (2:00)
  •      அக்டோபர் 30: ஆஃப்கானிஸ்தான் vs இலங்கை, புனே (2:00)
  •      நவம்பர் 3: நெதர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், லக்னோ (2:00)
  •      நவம்பர் 7: ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான், மும்பை (2:00)
  •      நவம்பர் 10 தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான், அகமதாபாத் (2:00)

உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி

ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் , நவீன் உல் ஹக்.

TAGS