ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni

Updated: Fri, Jul 07 2023 10:57 IST
Image Source: CricketNmore

இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், அந்த ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.

இதையெல்லாம் தெரிந்தே தான் மகேந்திர சிங் தோனி அப்போறுப்பை ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி விளையாடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார். அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை. 

திறமைகள் அதிகம் இருந்தாலும், தன் மேல் இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே தோனி உருவாகியுள்ளார். கிரிக்கெட் வீரர் என்பவர் சூழலுக்கு தகுந்தது போல் ஆட வேண்டும். அதில் தோனி எப்போதும் கில்லி தான். அப்படி விளையாடிய 10இல் 9 போட்டியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர் தோனி. அதேபோல் தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்ள தோனி எப்போதும் தவறியதே இல்லை. கேப்டன் ஆனதில் இருந்து 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் என பேச்சு எடுத்தால் ஜொஹிந்தர் ஷர்மாவை நினைவில் கொண்டு வந்தது, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை சிக்சர், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கொப்பையில் இஷாந்த் ஷர்மாவை 18ஆவது ஓவர் வீச வைத்தது, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தியது என, பல வெற்றிகளுக்கு முழுக்க முழுக்க தோனியே காரணம் என பலரையும் நம்ப வைத்துள்ளார். 

அது உண்மை என்றாலும், பலரின் உழைப்பும் இந்தப் போட்டிகளில் உள்ளது. ஒரு சில போட்டிகளில் இப்படியான மொமெண்ட்ஸ் ஒரு சில வீரர்களுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்நாளின் தான் ஆடிய பாதி ஆட்டங்களில் தனக்கான மொமெண்ட்ஸை தோனி தக்கவைத்துக் கொண்டதை அதிர்ஷ்டம் எனக் கூறிவிட முடியாது. சதுரங்கப் போட்டியின்போது தனது காய்களை எதற்காக நகர்த்துவோம் என்பது கடைசி வரை எதிரில் உள்ளவருக்கு தெரியக் கூடாது. அதுபோல் கிரிக்கெட்டில் கேப்டனின் செயல்களும் இருக்க வேண்டும். எந்த வீரருக்கு எந்த ஃபீல்ட் செட் செய்ய வேண்டும், எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும், எந்த பந்தினை வீச வேண்டும் என அனைத்தையும் தோனியே முடிவு செய்வார். எதிரணிக்கு செக் மேட் சொல்வதற்கு சின்ன சின்ன ஃபீல்டிங் மாற்றங்களும் தோனிக்கு பயனளித்துள்ளன.

2011ஆம் ஆண்டு வரை கங்குலி அணியைக் கொண்டு தான் தோனி வெற்றி பெற்றார் என விமர்சித்தவர்கள் மத்தியில், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை, தான் அடையாளம் கண்ட அணியை வைத்து வென்று காட்டினார் தோனி. அந்தப் போட்டியில் 130 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும் எனத் தெரிய வந்தபோது, கடவுள் வந்து நம்மை வெற்றி பெற வைக்கப் போவதில்லை. நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், நாம் தான் போராட வேண்டும் எனப் பேசியதோடு நில்லாமல், ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றார். இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையைக் கைகளில் அள்ளினார்.

கேப்டன் ஆவதற்கு முன்பிலிருந்தே தோனியின் ஆட்டம், “சும்மா ஆயிரம் வாலா பட்டாசாக” இருக்கும். முதல் பந்திலிருந்தே பவுண்டரி, சிக்சர் எனத் தொடங்கி விடுவார். ஆஸ்திரேலியர்களுக்கே உரித்தான கில்லர் இன்ஸ்டின்க்ட் உடன் ஆடுவார். தோனி டாப் வரிசையில் விளையாடிய 129 இன்னிங்களில் மொத்தம் 5,500 ரன்கள், அதேபோல் 6,7,8 ஆகிய வரிசையில் விளையாடிய 129 இன்னிங்ஸ்களில் 4,168 ரன்கள் எனக் குவித்து தனது ஆட்டத்தை எப்போதும் மேம்படுத்தியே வந்துள்ளார். தோனி நினைத்திருந்தால் டாப் ஆர்டரிலேயே ஆடியிருக்கலாம். அணியின் நலன் கருதி ஃபினிஷர் ரோலுக்கு தன்னை உருமாற்றிக் கொண்டவர் தோனி. வெளிநாட்டு மைதானங்களிலும் தன்னுடையே ஆவரேஜை 40க்கு கீழ் கொண்டு செல்லாதவர்.

இதுவரை தோனியைத் தவிர்த்து இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 24 விக்கெட் கீப்பர்கள், மொத்தமாக 640 போட்டிகளில் விளையாடி 7,822 ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் தோனி 347 போட்டிகளில் விளையாடி 10,599 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்த ஒரே வீரர் தோனி தான். தோனி வருவதற்கு முன்பாக இந்திய அணியில் முழுமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பவர் கிடையாது. ஆம், இவரைப் போல் விக்கெட் கீப்பராக வர வேண்டும் என்று எடுத்துக்காட்டு சொல்வதற்கு கூட யாரும் இல்லாத நிலை தான். ஆனால். எதுவும் இல்லாமல் சுயமாக உருவானவர் தோனி.

இன்று அணியில் இருந்து தோனி வெளியேறி கிட்டத்திட்ட நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் இந்திய அணியால் முழுமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவரை உருவாக்க முடியவில்லை. சச்சினுக்கு பதில் விராட், டிராவிட்டிற்கு பதில் புஜாரா, லக்‌ஷ்மணுக்கு பதில் ரஹானே, ஆனால் விக்கெட் கீப்பர் தோனிக்கு பதிலாக இதுவரை யாரும் வரவில்லை. தனது ஆரம்ப கால கிரிக்கெட்டில்  “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க சார்” எனக் கேட்ட தோனியிடம், கடைசியாக, 'தலைவா ஒரேயொரு முறை களமிறங்கி உன் ஸ்டைலில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு போ' எனக் கேட்டு ரசிகர்கள் எதிர்பார்த்த தருணங்களும் இதில் அடங்கும்.

அதற்கு சாட்சி நடந்து முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தான். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போது மைதானம் மஞ்சள் நிறமாக மாறியது. அது சென்னையாக இருந்தாலும் சரி, அல்லது வெளியூர் மைதானங்களாக இருந்தாலும் சரி. அதற்கான காரணாம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிடையாது, தோனி அணியின் கேப்டனாக இருந்து களத்தில் விளையாடியது.  

இப்படி தனக்கென ஒரு தனி சகாப்தத்தையே உருவாக்கிய மகேந்திர சிங் தோனி, இன்று தனது 42அவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இவரது வயது தான் அதிகரித்துள்ளதே தவிர, தோனியின் வேகமும், திறனும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்த நிலையில், இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய்வேன் என தோனி கூறியது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலளித்துள்ளது. எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை #HappyBirthdayMSDhoni

TAGS