ஐபிஎல் 2023: அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இன்னும் ஒருசில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. அதன்படி சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தானத்தில் மோதுகின்றன.
இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி டாப் 5 வீரர்கள் குறித்த பட்டியலை இப்பதிவில் காண்போம்.
1. விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. அதிரடி நாயகனாக விராட் கோலிக்கு ஒரு முறை கூட அணியை சாம்பியனாக்க முடியாமல் போனது சோகமே. ஆனாலும், இதுவரையிலான ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோரை பதிவு செய்து நம்பர் 1 இடத்தில் உள்ள வீரர் கோலி தான்.
2008ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை மொத்தம் 223 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 'கிங்' கோலி. அதில் மொத்தம் 6,624 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் 113 ஆகும். ஸ்டிரைக் ரேட் 129.14. இதுவரை கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 சதங்களையும், 44 அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார்.
ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 14 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. ஷிகர் தவான்
டெக்கான் சார்ஜஸ், டெல்லி கேபிட்டல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல்-இல் விளையாடியுள்ளார் ஷிகர் தவன். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் போன்று களமிறங்கினால் பந்தை பறக்கவிடும் பாணி தவனுடையது.
இவர் 2008 முதல் 2022 வரையிலான ஐபிஎல் தொடர்களில் 206 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 6244 ரன்களை குவித்து இப்பட்டியளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதில் இவர் அதிகபட்சமாக 106 ரன்களை விளாசியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் இதுவரை 2 சதங்கள், 47 அரை சதங்கள், 701 பவுண்டரிகள், 136 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3.டேவிட் வார்னர்
இந்த பட்டியளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தான். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இவர் 2009 முதல் 2022 வரை 162 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 5,881 ரன்களை குவித்துள்ளார். இவரது தனிநபர் அதிகபட்சம் 126 ரன்கள் ஆகும். ஸ்டிரைக் ரேட் 140.69. மொத்தம் 4 சதங்கள், 55 அரை சதங்கள் மற்றும் 577 பவுண்டரிகள், 216 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் டேவிட் வார்னர்.
4. ரோஹித் சர்மா
இந்த பட்டியளில் 4 வது இடத்தில் உள்ளார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார். 2008 முதல் 2022 வரை 227 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி, 5879 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா.
இவரது தனிநபர் அதிகபட்சம் 109 நாட்அவுட். இவரது ஸ்டிரைக் ரேட் 129.89. மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு சதம், 40 அரை சதங்களை பதிவு செய்துள்ள ரோகித், 519 பவுண்டரிகளையும், 240 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
5. சுரேஷ் ரெய்னா
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளவர் மிஸ்டர் ஐபிஎல் என்ற செல்லப்பெயருக்கு சொந்த காரரான சிஎஸ்கேவின் செல்லப் பிள்ளையாக இருந்த சுரேஷ் ரெய்னா.
ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 2008 முதல் 2021 வரையில் 205 போட்டிகளில் விளையாடி 5,528 ரன்களைக் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 100 நாட்அவுட். ஸ்டிரைக் ரேட் 136.73.
மேலும் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரேய்னா இதுவரை ஒரு சதம், 39 அரை சதங்களையும் விளாசியிருக்கிறார். மேலும் 506 பவுண்டரிகளையும், 203 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.