ஐபிஎல் 2023: அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள்!

Updated: Mon, Mar 27 2023 19:55 IST
Image Source: CricketnMore

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. அதன்படி சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் இதுவரை நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களால் வாண வேடிக்கை காண்பித்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த டாப் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து இப்பதிவில் காண்போம். 

1. கிறிஸ் கெயில் 

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளில் விளையாடியதன் மூலம் மொத்தம் 142 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 357 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்.

அவர் மொத்தம் 4965 ரன்களையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் குவித்துள்ளார். ஓர் ஆட்டத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 175 நாட் அவுட். அதில் 6 சதங்கள், 31 அரை சதங்கள், 404 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருக்கிறார். இந்த லிஸ்ட்டில் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறார் கிறிஸ் கெயில்.

2. ஏபி டி வில்லியர்ஸ்

இப்பட்டியளில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் ரசிகர்களால் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ் தான். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

மொத்தம் 184 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 251 சிக்ஸர்களை பதிவு செய்து இப்பட்டியளின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதில் 3 சதம், 40 அரை சதம் உள்பட மொத்தம் 5162 ரன்களை அடித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிகபட்ச ஸ்கோர் 133 நாட் அவுட். 2008 முதல் 2021 வரை ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி இத்தனை சிக்ஸர்களை பறக்க விட்டார்.

3. ரோஹித் சர்மா

இப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் இருப்பர் இந்திய அணி மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் மொத்தம் 240 சிக்ஸர்களைப் பதிவு செய்துள்ளார். கடந்த 2008 முதல் 2022 வரை 227 ஐபிஎல் போட்டிகளி விளையாடியுள்ள ரோஹித், 1 சதம், 40 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார். இவரது அதிகபட்ச அஸ்கோர் 109 நாட் அவுட்.

4. எம் எஸ் தோனி

சிஎஸ்கே செல்லப் பிள்ளை 'தல' தோனி, 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். தற்போது சென்னையில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிஎஸ்கேவுக்கு 4 முறை கோப்பையை ஜெயித்து கொடுத்துள்ள தோனி, மொத்தம் 234 ஆட்ங்களில் விளையாடி 229 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.

இவரது அதிகபட்ச ஸ்கோர் 84 நாட் அவுட். மிடில் வரிசையில் இவர் இறங்குவார் என்பதால் தனக்கென ரன்களை சேர்க்க வேண்டும் என்று எப்போதும் நினைத்து விளையாட மாட்டார். அணியின் ஸ்கோரை உயர்த்த அல்லது வெற்றி இலக்கை அடைவதற்கு தேவையானதையே செய்வார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 4,978 ரன்களை குவித்துள்ள தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகவே ரசிகர்கள் தவம் இருப்பார்கள்.

5. கீரன் பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கீரன் பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் 2010 முதல் 2022 வரை மொத்தம் 189 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அதில் அவர் 223 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். 

16 அரை சதங்களை பதிவு செய்திருக்கிறார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 87 நாட் அவுட். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி (218 சிக்ஸர்கள்), டேவிட் வார்னர் (216 சிக்ஸர்கள்) உள்ளனர். இந்த ஆண்டும் சிக்ஸர் மழையை பார்க்க ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கிறார்கள்!

TAGS