ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மேலும் இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனிலாவது கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்)
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என அறிப்பட்ட டெல்லி அணியானது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகள் வரிசையில் டெல்லி கேப்டல்ஸ் அணியும் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ரிஷப் பந்த் தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அதன்பின் விளையாடிய மூன்று சீசனில் ஒருமுறை மட்டுமே டெல்லி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதிலும் குறிப்பாக கடந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி புள்ளிபட்டியலில் 9ஆம் இடத்தையே பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனிலும் அதிரடி வீரர்களைக் கொண்ட தொடரை தொடங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஒவ்வொரு முறையும் கோப்பையை நழுவவிட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. இதனால் நடப்பு ஆண்டு சீசனிலாவது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம்
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி ஐபிஎல் தொடரை தவறவிட்ட கேப்டன் ரிஷப் பந்த் ஓராண்டுக்கு பிறகு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியதுடன் அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசை மாற்றும் வீரராக ரிஷப் பந்த் பார்க்கப்படுவதால் அவரது வருகை அணிக்கு உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அணியின் பேட்டிங் வரிசையை எடுத்துக்கொண்டால் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் போன்ற வீரர்கள் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எப்போது சவாலாகவே இருந்து வருகின்றனர். இதில் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் அதிகமுறை அதிக ரன்களை அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு.
அவர்களைத் தொடர்ந்து பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை விளாசும் திறன் கொண்டவர்கள் என்பதால் அவர்களது பேட்டிங் டெல்லி அணிக்கு மிகமுக்கிய பங்கினை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க், யாஷ் துல், அபிஷேக் போரெல், ரிக்கி பூய் போன்ற வீரர்களும் இருப்பதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர்த்து பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோரும் இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத், முகேஷ் குமார், பிரவீன் தூபே போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், எதிரணி பேட்டர்களுக்கு எப்போது அச்சத்தைக் கொடுக்கும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோரது சமீபத்திய ஃபார்ம் அபாரமாக இருப்பதால் இது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடன் மிட்செல் மார்ஷும் ஒருசில ஓவர்கள் வீசுவார் என்பதால் அணியின் பந்துவீச்சு கூடுதல் வலிமை பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலவீனம்
நடப்பு சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது அந்த அணி வீரர்களின் காயம் தான். ஏனெனில் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி கடந்த ஓராண்டு காலமாக கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் தனது முழு உடற்தகுதியை ரிஷப் பந்த் நிரூபித்தாலும் அவரால் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடமுடியுமா என்பது சந்தேகம் தான். அதிலும் குறிப்பாக முதல் சில போட்டிகளில் ரிஷப் பந்தை பேட்டராக மட்டுமே பயன்படுத்த டெல்லி அணி முடிவு செய்துள்ளதால் இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பிரித்வி ஷா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற நட்சத்திர வீரர்களும் சமீப காலங்களில் பல காயங்களைச் சந்தித்துள்ளது டெல்லி அணிக்கு மிகப்பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே அணியில் இடம்பெற்றிருந்த ஹாரி ப்ரூக், லுங்கி இங்கிடி போன்ற வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், மேற்கொண்டு யாரெனும் காயத்தை சந்தித்தால் அது அணிக்கு மிகப்பெரும் பிண்டவை உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. டெல்லி அணியின் அடுத்த பலவீனம் என்றால் அது வேகப்பந்து வீச்சு துறை தான்.
காரணம் கலீல் அஹ்மத், இஷாந்த் சர்மா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கக்கூடியவர்களக உள்ளனர். ஒருபக்கம் முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்தினாலும் மற்ற வீரர்களின் செயல்பாடுகள் நிச்சயம் டெல்லி அணிக்கு தலைவலியை உண்டாக்கும். இதுபோக பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் நடப்பு சீசனில் டெல்லி அணி தனது சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தை விட்டு, விசாகப்பட்டினம் மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடவுள்ளது. இதனால் இந்த சீசனில் டெல்லி அணி தனது ஹோம் அட்வான்டேஜை இழக்கும் என்பது அணியின் மிகப்பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்) ஐபிஎல் வரலாறு
- 2008 - பிளே ஆஃப் சுற்று
- 2009 - பிளே ஆஃப் சுற்று
- 2010 - லீக் சுற்று
- 2011 - லீக் சுற்று
- 2012 - பிளே ஆஃப் சுற்று
- 2013 - லீக் சுற்று
- 2014 - லீக் சுற்று
- 2015 - லீக் சுற்று
- 2016 - லீக் சுற்று
- 2017 - லீக் சுற்று
- 2018 - லீக் சுற்று
- 2019 - பிளே ஆஃப் சுற்று
- 2020 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
- 2021 - பிளே ஆஃப் சுற்று
- 2022 - லீக் சுற்று
- 2023 - லீக் சுற்று
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
ரிஷப் பந்த்(கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், யாஷ் துல், ஸ்வஸ்திக் சிகாரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், குமார் குஷாக்ரா, ரிக்கி புய், ஷாய் ஹோப், பிரவின் துபே, அக்ஸர் படேல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், சுமித் குமார், அன்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஜேய் ரிச்சர்ட்சன், ரசிக் சலேம் தார்
டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை
இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 23 - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மொஹாலி
- மார்ச் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஜெய்ப்பூர்
- மார்ச் 31 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - விசாகப்பட்டினம்
- ஏப்ரல் 03 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - விசாகப்பட்டினம்
- ஏப்ரல் 07 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை