ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!

Updated: Wed, May 29 2024 16:08 IST
Image Source: Google

 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இதில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.  அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரானது பந்துவீச்சாளர்கள் மத்தியில் மறக்க வேண்டிய ஒரு தொடராகவே இருந்துள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஹர்ஷல் படேல் - பஞ்சாப் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியாக ஒப்பந்தமாகி விளையாடிய ஹர்ஷல் படேல் ரன்களை வாரி வழங்கினாலும், இறுதிக்கட்டத்தில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருக்கான பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தியுள்ளார். ஹர்ஷல் படேல் பர்ப்பிள் தொப்பியை வெல்வது இது இரண்டாவது முறை. முன்னதாக, 2021ஆம் அண்டு ஐபிஎல்சீசனில் 32 விக்கெட்களை வீழ்த்தி பர்ப்பிள் நிற தொப்பியை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருண் சக்ரவர்த்தி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் இந்த சீசனின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் ரன்களை வாரி வழங்கிய இவரும், இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடியதுடன் நடு ஓவர்களில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தும் துருப்பு சீட்டாகவும் கொல்கத்தா அணிக்கு விளங்கினார். மேலும் கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் வருண் சக்ரவர்த்தி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்ப்ரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையிலும், தனது அபாரமான யார்க்கரின் மூலமும், ஸ்லோயர் பந்துகள் மூலமாகவும் எதிரணி பேட்டர்களுக்கு தொடர்ச்சிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய வீரர் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தான். இந்த சீசனில் ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் 13 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ள பும்ரா, இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். அதிலும் இவரது எகனாமியானது வெறும் 6.48 தான் என்பது கூடுதல் சிறப்பாகும். 

நடராஜன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இப்போட்டியளின் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது தமிழகத்தை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீரரான நடராஜன் தான். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 9.05 என்ற எகனாமில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இறுதி ஓவர்களில் அபாரமாக செயல்பட்டுள்ள நடராஜன், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பதை யாராலும் மறந்துவிட முடியாது. 

ஹர்ஷித் ரானா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷித் ரானா 19 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மணிக்கு 140+ வேகத்திலும், அதேசமயம் 110+ வேகத்திலும் என வேகத்தை மாற்றி மாற்றி இவர் பந்துவீசி எதிரணி பேட்டர்களை திக்குமுக்காட வைத்துள்ளதன் காரணமாக, விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS