ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!

Updated: Tue, May 28 2024 14:29 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அறிவிக்கப்பட்டு, அதில் முதற்கட்ட வீரர்கள் நியூயார்க் சென்றுள்ளனர். இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி

கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியானது, அதன்பின் நடைபெற்ற எந்தவொரு டி20 உலகக்கோப்பை தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் அந்த கவலையைப் போக்கி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்திய அணியின் பலம்

இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவரும் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்களின் முதன் மூன்று இடங்களில் உள்ளனர். அவர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவும் இருப்பது கூடுதல் உத்வேகமளிக்கும். 

அவர்களுடன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோருடன் காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்தும் அணியில் இடம்பிடித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு நம்பிக்கையளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தங்கள் பார்முக்கு திரும்பினால் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்துவார்கள். 

மேற்கொண்டு ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹாலும் இடம்பிடித்துள்ளனர். இதில் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தற்போது அக்ஸர் படேலும் அணியில் இருப்பது கூடுதல் பலமே. மேற்கொண்டு குல்தீப், சஹால் இருவரது சுழலும் இந்திய அணிக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் பும்ரா தொடர்ந்து தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்கும் என்று நம்பலாம்.

இந்திய அணியின் பலவீனம்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் எந்த சந்தேகமும் இன்றி வலுவானதாகவே அமைந்துள்ளது. ஆனாலும் இதில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி அதிகரித்துள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் கூட அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. 

மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஐபிஎல் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஷிவம் தூபே தொடக்கத்தில் அசத்தினாலும், பிற்பகுதியில் பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஹர்திக் மற்றும் ஜடேஜா ஆகியோரது பேட்டிங் ஃபார்மும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை குல்தீப் மட்டுமே நீண்ட காலமாக விளையாடி வருகிறார். சாஹல் நீண்ட காலம் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர்கள் ஸ்பின்னர்களான ஜடேஜா, அக்சர் உடன் இவர்களும் அணியில் உள்ளனர். எனவே 4 ஸ்பின்னர்கள் அணியில் தேவையா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

வேகப்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் சிராஜின் ஐபிஎல் ஃபார்ம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர் ஐபிஎல் தொடரில் சோபிக்க தவறினார். அதேபோல் தான் அர்ஷ்தீப் சிங்கும் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சானது ஜஸ்ப்ரித் பும்ராவை மட்டுமே சார்ந்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ்கான்.

இந்திய அணி அட்டவணை

  • ஜூன் 05 - இந்தியா vs அயர்லாந்து, நியூயார்க் 
  • ஜூன் 09 - இந்தியா vs பாகிஸ்தான், நியூயார்க்
  • ஜூன் 12 - இந்தியா vs அமெரிக்கா, நியூயார்க்
  • ஜூன் 15 - இந்தியா vs கனடா, புளோரிடா
TAGS