ஐபிஎல் தொடரில் அதிகரிக்கும் கரோனா எண்ணிக்கை; தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ திட்டமா?
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது கிரிக்கெட் உலகை அதிரவைத்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனாவின் கோர பிடியில் சிக்கியிருக்கும் நிலையிலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரின் இறுதிப்போட்டி ஏப்.30ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து வீரர்களும் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அணியின் பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். எனினும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அக்ஷர் பட்டேலுக்கும், கொல்கத்தா அணி வீரர் நிதிஷ ராணாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு போட்டிகளில் பங்கேற்க தொடங்கினர்.
Trending
இதே போல ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் தேவ்தத் பட்டிகல்லுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்த செய்தி வந்து சேர்வதற்குள் அந்த அணியின் மற்றொரு வீரரான டேனியல் சாம்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் தற்போது இருவரும் குணமடைந்து அணியுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க வீரரான ஆண்ட்ரிச் நோர்ட்ஜே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றிருந்தார் ஐபிஎல் தொடருக்கு தாமதமாக வருகை தந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட முதல் பரிசோதனையில் கரோனா தொற்று உள்ளது என முடிவு வந்தது. பின்னர் 2 நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட 3வது சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் தவறான பரிசோதனை முடிவால் தேவையின்றி அவர் 2 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதுவரை கரோனா தொற்று உறுதியானவர்கள் குணமடைந்து அணியுடன் திரும்பிய நிலையில் இன்று மேலும் 2 வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியில் சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, பேருந்து பராமரிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.