சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகள் குறித்த ஒரு சிறிய கண்ணோட்டம் இதோ.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போதைய கிரிக்கெட் உலகின் ரன் மெஷினாகவும், இந்திய கிரிக்கெட்டின் தனிப்பெரும் அடையாளமாகவும் திகழ்கிறார். டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட கோலி 2008ஆம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் தற்போது பல முன்னாள் நட்சத்திரங்களின் சாதனைகளைக் கடந்து சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை படைக்கும் கோலி பேட்ஸ்மேனாகவும், அணியின் கேப்டனாகவும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
Trending
Wishing Virat Kohli a very happy birthday #Cricket #T20WorldCup #IndianCricket #HappyBirthdayViratKohli #ViratKohli pic.twitter.com/cOI9J5e8Ns
— CRICKETNMORE (@cricketnmore) November 4, 2022
பேட்ஸ்மேனாக கோலி படைத்த சாதனைகள்:
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை (7) இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி, கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிவேகமான 1000, 8000, 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் வேகமாக ஆயிரம், இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர்.
- பத்து ஆண்டுகளில் விரைவாக 20 ஆயிரம் சர்வதேச ரன்களைக் கடந்த ஒரே வீரர்
- டி20 போட்டிகளில் சராசரியாக 50 வைத்துள்ள ஒரே இந்தியர். அதுமட்டுமல்லாது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மேன்.
- ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 900 புள்ளிகளைப் பெற்ற ஒரே இந்தியர்.
- ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விராட் கோலி கேப்டன்சி
தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட்டில் ஓய்வை அறிவித்த பின் இந்திய டெஸ்ட் அணிக்குத் தலைமை வகித்த கோலி, பின்னாளில் அனைத்து விதமான போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படத் தொடங்கினார். இவர் தலைமையில் இந்திய அணி குறிப்பிடும்படியான சாதனைகளை படைத்தது.
The Ultimate GOAT
— CRICKETNMORE (@cricketnmore) November 5, 2022
.
.#CricketTwitter #indiancricket #teamindia #HappyBirthday #ViratKohli #HappyBirthdayVirat pic.twitter.com/3N0AlDaNNg
இவரது தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. கேப்டன் பதவி கோலிக்கு ஒன்றும் புதிதல்ல. அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு முன்பாகவே 2008ஆம் ஆண்டு ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை வகித்திருக்கிறார்.
அந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய கோலி இந்திய அணிக்கு கோப்பையையும் பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்:
- 2017ஆம் ஆண்டு 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கோலி, 1460 ரன்கள் எடுத்து ஒரு வருடத்தில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
- டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை இரட்டை சதம் விளாசிய கேப்டன்
- அதிக வெற்றிகளை (31) பெற்றுத் தந்த இந்திய டெஸ்ட் கேப்டன்
- வெளிநாட்டு மைதானங்களில் அதிக வெற்றி (13) பெற்ற இந்திய கேப்டன்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகமுறை 150க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த வீரர் என்ற டான் பிராட்மேனின்(8) சாதனையை கோலி(9) முறியடித்தார்
- ஒருநாள் போட்டிகளில் 75.89 விழுக்காடு என்ற கணக்கில் வெற்றிகரமான கேப்டனாகவும் உள்ளார்.
விராட் கோலியின் ஃபார்ம் அவுட்
ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டிற்கு பின் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில தடுமாற்றங்களை சந்தித்தார். அதிலும் குறிப்பாக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
''You are one hell of a cricket player, but you are a much better human being''
— CRICKETNMORE (@cricketnmore) November 5, 2022
AB de Villiers's heartwarming message for Virat Kohli #Cricket #T20WorldCup #HappyBirthday #ViratKohli #HappyBirthdayViratpic.twitter.com/Jw1jjmPMOa
அதுமட்டுமின்றி அவரது ஃபார்ம் மற்றும் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து சொதப்பியது அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்தது.
இதன் காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட் கோலிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது பிசிசிஐ. ஆம், டி20 கேப்டன்சியை கோலி கைவிட, அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பிசிசிஐ விலக்கி ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது.
தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சாதாரண வீராக விளையாடி வரும் விராட் கோலி, கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரன் மெஷின் எனும் தனது செல்லப்பெயருக்கு ஏற்ற வகையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிராக சர்வதேச டி20 சதம், டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த சதங்கள் என மீண்டும் கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை விராட் கோலி ஆளத்தொடங்கியுள்ளார்.
விராட் கோலி பெற்ற விருதுகள்
சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த விராட் கோலிக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது (2013), பத்மஸ்ரீ (2017), ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2018) விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இப்படி பல சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவர் இதேபோன்று இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.