கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ்.

சமீப காலமாக இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யதாவ். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார்.
அதிலும் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆச்சர் வீசிய தனது முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி மாஸான ஒரு எண்ட்ரியை கொடுத்திருந்தார். இதனால் தான் சூர்யகுமார் யாதவ் என்ற பெயர் பரபரப்பாக பேச தொடங்கியதா? என்றால். அதற்கு பதில் இல்லை.
Trending
அப்படி இருக்க எதனால் இவரது பெயர் அடிக்கடி வர்ணனையாளர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியாது. அதற்கான காரணம் தான் என்ன என்று கேட்டால், அதற்கு முதலில் நாம் சூர்யகுமார் யதாவ்வின் வாழ்க்கை பதிவுகளை தான் பார்க்க வேண்டும்.
1990ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள, தானே நகரில் பிறந்தவர் சூர்யகுமார் அஷோக் யாதவ். தனது பத்தாவது வயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட அதீத காதலால், மும்பையிலுள்ள தெருக்களில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்க ஆரம்பித்தார்.
அதன்பின் தனது 20ஆவது வயதில் ரஞ்சி கோப்பைகான மும்பை அணியில் இடம்பிடித்து, தனது முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார். இதன் பயணாக 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் அப்போதிருந்த மும்பை அணியில் தலைசிறந்த வீரர்கள் இருந்ததால் இவருக்கான வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை. இதனால் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் அந்த சீசனிலும் இவரது பெயர் அந்த அளவிற்கு வெளியே தெரியவில்லை. அதன்பின் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மும்பை அணிக்கெதிராக 20 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 48 ரன்களை குவித்து கேகேஆர் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அப்போது தான் சூர்யகுமார் யாதவ் என்ற பெயர் இந்தியா முழுவது தெரிய தொடங்கியது.
அதன்பின் கேகேஆர் அணியின் துணைக்கேப்டனாக கிட்டத்திட்ட மூன்று ஆண்டுகள் செயல்பட்டுவந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போது ரூ.3.2 கோடிக்கு மும்பை அணி மீண்டும் சூர்யகுமார் யாதவ்வை மீண்டும் தங்கள் பக்கம் எடுத்தது.
தனது சொந்த ஊர் அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அந்தாண்டு ஐபிஎல் சீசனில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் அதே ஆண்டு இந்திய சி அணிக்காக தேர்வும் செய்யப்பட்டார்.
அதன்பின் 2019 ஆம், 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த கோப்பைகளை வெல்வதற்கு துருப்புச்சீட்டாக இருந்தார் என்றால் அது மிகையல்ல. இதனாலேயே சூர்யகுமார் ஏன் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எலத்தொடங்கியது.
அதிலும் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் இவரது பெயர் இடம்பெறாமல் இருந்த போது பிசிசிஐ, அணி தேர்வு குழுவினர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதை எதனையும் பொருட்படுத்தாமல் சூர்யா, விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி என உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறனை நிருபித்தார். இதன் பயனாகவே இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ்வின் பெயர் இந்திய அணியில் இடம்பெற்றது.
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்த சூர்யா, முதல் பந்திலேயே சிக்சரை விளாசி அனைவரது எதிர்பார்ப்புக்கும் பதிலளித்தார். இவரின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் இடமானது வலிமைப் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.