ஐசிசி உலகக்கோப்பை 2023: மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா நெதர்லாந்து?
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்கு போட்டியிடும் டாப் 10 கிரிக்கெட் அணிகளில் நெதர்லாந்து மிகவும் கத்துக்குட்டியாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய அந்த அணி அதன் பின் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
அதை தொடர்ந்து உறுப்பு நாடுகளுக்கு மத்தியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பை பெற்ற அந்த அணி கடைசியாக இந்திய மண்ணில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பையில் மட்டுமே விளையாடியிருந்தது. ஏனெனில் அதைத்தொடர்ந்து குவாலிஃபையர் தொடர்களில் தோல்வியை சந்தித்த அந்த அணி 2015, 2019 உலகக் கோப்பைகளில் விளையாடுவதற்கு தகுதி பெறவில்லை.
Trending
இருப்பினும் இம்முறை கடந்த ஜூன் மாதம் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிஃபயர் தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய அந்த அணி முக்கிய நேரத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து போன்ற அணிகளை பின்னுக்கு தள்ளி ரன் ரேட் உதவியுடன் இறுதிப்போட்டிக்கு வந்தது. அதில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்தாலும் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
நெதர்லாந்து அணியின் பலம் & பலவீனம்
நெதர்லாந்து அணியை எடுத்துக்கொண்டால் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், வேன் டெர் மெர்வி ஆகியோர் பேட்டிங் துறையில் தரமான வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். அதே போல பவுலிங் துறையில் வேன் பீக், ஆர்யன் தத், ரியன் க்ளென் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ஆல் ரவுண்டர்களில் பாஸ் டீ லீட், லோகன் வான் பீக், காலின் அக்கர்மேன் ஆகியோர் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இருப்பினும் அவர்களை தவிர்த்து அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை திருப்பும் அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனமாகும். குறிப்பாக அனைத்து துறைகளிலும் நிரப்பும் அளவுக்கு தேவையான வீரர்கள் இருக்கிறார்களே தவிர அவர்களால் இந்தியா போன்ற டாப் அணிகளுக்கு சவாலை கொடுக்கும் அனுபவமும் தரமும் இல்லை என்ற சொல்லலாம்.
எனவே அந்த அணியால் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து கோப்பையை வெல்ல முடியும் என்பது அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் போராடி இத்தொடருக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி நிச்சயமாக வருங்காலத்தில் முன்னேறும் அளவுக்கு சில மறக்க முடியாத எழுச்சி காணும் வெற்றிகளை பதிவு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நெதர்லாந்து அணியின் உலகக்கோப்பை பயணம்
- 1975: பங்கேற்கவில்லை
- 1979: தகுதி பெறவில்லை
- 1983: தகுதி பெறவில்லை
- 1987: தகுதி பெறவில்லை
- 1992: தகுதி பெறவில்லை
- 1996: லீக் சுற்று
- 1999: தகுதி பெறவில்லை
- 2003: லீக் சுற்று
- 2007: லீக் சுற்று
- 2011: லீக் சுற்று
- 2015: தகுதி பெறவில்லை
- 2019: தகுதி பெறவில்லை
உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், காலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, ஷாகிப் சுல்ஃபிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
நெதர்லாந்து அணியின் போட்டி அட்டவணை
- அக்டோபர் 06: நெதர்லாந்து vs பாகிஸ்தான், ஹைதராபாத்
- அக்டோபர் 09: நெதர்லாந்து vs நியூசிலாந்து, ஹைதராபாத்
- அக்டோபர் 17: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, தர்மசாலா
- அக்டோபர் 21: நெதர்லாந்து vs இலங்கை, லக்னோ
- அக்டோபர் 25: நெதர்லாந்து vs ஆஸ்திரேலியா, டெல்லி
- அக்டோபர் 28: நெதர்லாந்து vs வங்கதேசம், கொல்கத்தா
- நவம்பர் 03: நெதர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், லக்னோ
- நவம்பர் 08: நெதர்லாந்து vs இங்கிலாந்து, புனே
- நவம்பர் 12: நெதர்லாந்து vs இந்தியா, பெங்களூரு